விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகாதது குறித்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் சிம்புவின் படத்துக்காக ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையை இன்று (24) காலை 10.30 மணிக்குள் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு பணத்தைக் கொடுக்காவிட்டால் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதனையடுத்து, திட்டமிட்டபடி இன்று ‘துருவ நட்சத்திரம்’ படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் பதிவிட்டுள்ளதாவது:
‘மன்னிக்கவும். இன்று ‘துருவ நட்சத்திரம்’ படத்தை திரைக்கு கொண்டு வரமுடியவில்லை. நாங்கள் எங்களால் ஆன முயற்சிகளை செய்தோம். ஆனால் எங்களுக்கு இன்னும் ஓரிரு நாட்கள் தேவைப்படுவது போல தெரிகிறது. உலகம் முழுக்க, அட்வான்ஸ் புக்கிங் மற்றும் முறையான திரைகள் வழியாக அனைவருக்கும் நல்ல அனுபவத்தை தருவோம் என்று நம்புகிறேன். படத்துக்கு கிடைக்கும் ஆதரவு மகிழ்ச்சியையும், எங்களை தொடர்ந்து இயங்கவும் வைத்தது. இன்னும் கொஞ்ச நாட்கள்தான். நாங்கள் வருகிறோம்’ என குறிப்பிட்டுள்ளார்.