தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் இளம் தொழில் முனைவோருக்கான 5 நாள் வதிவிட பயிற்சி நெறி ஒன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றமானது நாடளாவிய ரீதியில் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கான இந்த பயிற்சி நெறிகளை முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொழில் புரிந்து வருகின்ற தொழில் முயற்சிகளை புதிதாக ஆரம்பிக்க ஆர்வமுள்ள இளைஞர்கள் 35 பேரை தெரிவு செய்து அவர்களுக்கான வியாபார திட்டம் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சி நெறிகள் இந்த ஐந்து நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த பயிற்சி நெறியின் ஊடாக அவர்கள் தங்களது சுய தொழில்களை முன்னேற்றி தங்களது பொருளாதாரத்தை பலப்படுத்துவதோடு நாட்டினுடைய பொருளாதாரத்திற்கும் அவர்களுடைய பங்களிப்பினை வழங்கக்கூடிய வகையிலே இந்த பயிற்சி நெறி வழங்கப்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று , புதுக்குடியிருப்பு ,ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய ஐந்து பிரதேச செயலாளர்கள் பிரிவுகளையும் உள்ளடக்கிய சுமார் 35 இளைஞர் யுவதிகள் இந்த பயிற்சி நெறியில் கலந்து கொண்டு பயன்பெற்றுவருகின்றனர்.