ரயிலில் ஏற முற்பட்ட போது, தவறி கீழே வீழ்ந்து நபரொருவர் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் பதிவாகியுள்ளது.
சாவகச்சேரி, சங்கத்தானையைச் சேர்ந்த 3 பெண் பிள்ளைகளின் தந்தையான மாணிக்கம் விஜயரட்ணம் என்ற 69 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
கடந்த 8 ஆம் திகதி இரவு 07.30 மணிக்கு தச்சன்தோப்பு ரயில் நிலையத்திலிருந்து குறித்த நபர் ரயிலில் ஏற முற்பட்ட போது தவறி தண்டவாளத்தில் வீழ்ந்துள்ளார்.
இதனால் படுகாயமடைந்த அவர், உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந் நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.