யுத்த காலத்தில் வவுனியா – புதிய கோவில்குளம் பகுதியில் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களால் ஆயுதங்கள் மற்றும் தங்கம் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று இடங்களில் வவுனியா நீதவான் வசீம் அஹமட் மேற்பார்வையில் நேற்று (12) மாலை அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தனியார் நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று இடங்களில் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இறுதி யுத்தத்தின் போது குறித்த காணியின் இடத்தில் விடுதலை புலிகள் அமைப்பின் முகாம் இருந்ததாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, வவுனியா நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு பொலிஸ் குற்றத்தடுப்பு ஆய்வு கூட அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பூவரசங்குளம் பொலிஸார் இணைந்து அகழ்வு பணிகளை மேற்கொண்டனர்.
பல மணிநேரம் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போதும் ஆயுதங்களோ அல்லது வேறு எதனையும் கண்டுபிடிக்கவில்லை என கூறப்படுகிறது.
தோண்டப்பட்ட இடங்களில் எதுவும் கிடைக்காததால், மீண்டும் தோண்டப்பட்ட இடங்களை மூடுமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பூவரசங்குளம் பொலிஸாருக்கு உரிய இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகள் தொடர்பான விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.