கடந்த காலங்களில் பல விடயங்களை அனுபவித்த தாம் மனிதர்களை அடையாளம் காணக்கூடியதாக இருந்ததாகவும், சரியான நேரத்தில் மக்களுடன் இணைந்து சரியான தீர்மானத்தை எடுப்பேன் எனவும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொது மே தின பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நண்பர்களே, சிலர் எங்களை விமர்சிக்கிறார்கள். ஆனால் அது அவர்களின் அரசியல் பிரச்சாரம். தேவைப்படும்போது சரியான முடிவுகளை எடுப்போம் என்பதை நாங்கள் உங்களுக்கு நினைவூட்ட வேண்டும்.
நாம் பொருளாதாரத்தை திட்டமிடும்போது, உழைக்கும் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அன்றிலிருந்து இன்று வரை நாம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கம் எம்முடன் இருந்து நாட்டின் நலனுக்காக எம்மை ஆட்சிக்கு கொண்டுவர தேவையான தியாகங்களை செய்திருக்கிறீர்கள்.
உண்மையான தொழிலாளர் தலைவர்கள் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக உழைக்கவில்லை. அந்த நேரத்தில், தொழிலாளர் இயக்கம் நாட்டின் சுதந்திரத்திற்கு முக்கிய சக்தியாக இருந்தது. உங்களுக்கு நினைவிருக்கலாம். அன்றைய தொழிலாளர் தலைவர்கள், தொழிலாளர் இயக்கத்தை நாட்டை அராஜகத்திற்கு வழிநடத்தியதில்லை.
நாம் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் கைப்பாவையாக மாறாமல், உள்ளுர் சிந்தனையின்படி வேலை செய்யப் போனதால், பல்வேறு அரசு சாரா அமைப்புகளையும், அரசியல் அமைப்புகளையும் ஒன்று திரட்டி ஒரு சதி செய்யப்பட்டது. எங்களின் உடைமைகளை மட்டுமல்ல, உயிரையும் சேதப்படுத்த நினைத்தனர்.
மக்களுக்காக ஆட்சியை கைப்பற்றி மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக்கொடுக்கும் அரசியல் அனுபவம் எமக்கும் எமது கட்சிக்கும் இருக்கின்றது என்பதை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்த வேண்டும்.
மேலும்இ எந்த நேரத்திலும் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில், அமைப்பு பலத்துடன் எழ முடியும் என்பதை நிரூபித்துள்ளோம். எனவே, அரசியலை எவ்வளவு விமர்சித்தாலும் சேற்று அரசியலில் வீழாதீர்கள்.
கடந்த காலங்களில் நாம் பல அனுபவங்களைப் பெற்றுள்ளோம். மக்கள் அங்கீகரித்தார்கள். நாம் இப்போது நாட்டை பலப்படுத்த வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த நாட்டை உருவாக்குங்கள். என்றார்.