பிரபல இசையமைப்பாளர்களுள் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி புனேவில் நடந்து வந்த நிலையில் திடீரென பொலிஸார் அந்த இசை நிகழ்ச்சியை நிறுத்தியது பரபரப்பு ஏற்படுத்தியது.
இரவு 10 மணி வரை மட்டுமே ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் 10 மணிக்கு மேல் இசை நிகழ்ச்சி நடைபெற்றதால் அதை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றும் புனே போலீசார் தெரிவித்துள்ளனர்.
பத்து மணிக்கு மேல் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை பாடத் தொடங்கிய போது காவல்துறை அதிகாரி ஒருவர் இசை நிகழ்ச்சியை நிறுத்தும்படி சைகை செய்ததாகவும் ஆனால் அதை கவனிக்காமல் இசை நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததை அடுத்து மேடைக்கு ஏறிய போலீசார் நிறுத்தும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
அதாவது ஏ.ஆர்.ரஹ்மான் கடைசி பாடலை பாடிக்கொண்டிருந்தபோதே அவரை காவல்துறை தடுத்த சம்பவத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் கடைசி பாடலை முடிக்கும் வரை பொலிஸார் அமைதி காக்கவேண்டும் என்றும் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
ஆஸ்கர் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் மேடையில் ஏறி தடுத்து நிறுத்தியது அவரை அவமதிக்கும் செயல் எனவும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.