இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ‘800’ திரைப்படத்தின் முதற்பார்வை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
முத்தையா முரளிதரனின் 51 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று காலை 8 மணிக்கும் இதன் முதற்பார்வை வெளியிடப்பட்டது.
இந்தத் திரைப்படம் இந்த வருடம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில், அதிகூடிய விக்கெட்டுகளை பெற்ற பந்துவீச்சாளர் என்ற சாதனை முரளிதரன் இன்னமும் தன்னகத்தே கொண்டுள்ளார். அவர் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 800 விக்கெட்டுகளை பெற்றுள்ளார்.
அதனை கௌரவிக்கும் விதமாக அவரது, வாழ்க்கை வரலாற்றை பற்றிய திரைப்படத்துக்கு ‘800’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தில், முத்தையா முரளிதரன் கதாப்பாத்திரத்தில், ஒஸ்கார் விருது வென்ற ஸ்லம்டோக் மில்லியனர் படத்தில் நடித்த, மாதுர் மிட்டல் நடிக்கிறார். கதாநாயகியாக மஹிமா நம்பியார் நடிக்கிறார்.
எம்.எஸ். சிறிபாதி இயக்கும் இந்தத் திரைப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
முன்னதாக முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்படார். எவ்வாறாயினும், அதன் பின்னர் எழுந்த விமர்சனங்களையடுத்து, அவர் அதிலிருந்து விலகிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.