பாதீட்டு முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துமாறு, பாதீட்டுக்கு எதிராக வாக்களித்த எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புவது கேலிக்கூத்தானது என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதீட்டுக்கு ஆதரவாக நாங்கள் வாக்களித்தோம். எதிர்க்கட்சியில் இருந்த அனைவரும் அதற்கு எதிராக வாக்களித்தனர். அதாவது திறைசேரியிலிருந்து இருந்து வரவு செலவுத் திட்டத்திற்குப் பணம் ஒதுக்குவதை எதிர்க்கிறார்கள்.
பாதீட்டு எதிராக வாக்களித்தவர் தேர்தலுக்கு பணம் கொடுங்கள் என்று ஏன் கூச்சல் போடுகிறார்கள்? அவ்வாறு செய்ய அவர்களுக்கு உரிமை இல்லை என்றார்.
இந்த நாடு வாக்கெடுப்பு நடத்தும் நிலையில் உள்ளதா? தற்போது மக்களுக்கு அவசியம் தேர்தலா அல்லது நிவாரணங்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 8711 உறுப்பினர்களை நியமித்து, மீண்டும் வரி செலுத்த வேண்டுமா? இந்த நேரத்தில் பதவி ஆசையில் வாக்குளை கேட்கிறார்கள். தற்போது தேர்தலை நடத்தி வித்தை காட்ட முடியாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்.
நாட்டைக் காப்பாற்ற எவராவது எதிர்க்கட்சித் தலைவருக்கு டொலர் கொடுப்பார்களா? இந்த தேர்தலால் ஆட்சியை மாற்ற முடியாது. கடந்த இரண்டு மாதங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டுக்கு வந்துள்ளனர். இந்த நேரத்தில் வீதியில் இறங்கி போராடும்போது மக்கள் நாட்டுக்கு வருவார்களா? எமக்கு கிடைப்பதையும் இல்லாமலாக்கவே அவர்கள் முயற்சிக்கின்றனர் என்றார்.
