இந்தியாவும் இலங்கையும் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று (28) பிற்பகல் வெளிவிவகார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டன.
இதன்படி, இலங்கை டிஜிட்டல் அடையாளத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை நிறுவுதல் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு வெளியே உள்ள மூன்று தீவுகளில் கலப்பு மின் நிலையத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
மேலும், இலங்கையில் மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கும், காலி மாவட்டத்தில் உள்ள 200 பாடசாலைகளில் நவீனமயப்படுத்தப்பட்ட கணினி ஆய்வகங்களை நிறுவுவதற்கும், சுஷ்மா சுராஜ் வெளிநாட்டு சேவை நிறுவனத்திற்கும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.