முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது துணைவியார்களை பராமரிப்பதற்காக வரி செலுத்துவோரின் பணத்தை செலவிடும் நடைமுறையை நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு வங்குரோத்து நிலையில் இருக்கும்போது அரசியல் குடும்பங்களை பராமரிக்க முடியாது. 1993 ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்டதிலிருந்து அவரது துணைவியார் ஹேமா பிரேமதாசவுக்கு அரச நிதி வழங்கப்படுகிறது.
அதேபோல முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் ஆடம்பர செலவுகளுக்காக பெருந்தொகை அரச நிதி ஒதுக்கப்படுகிறது.
பெரும்பான்மையான மக்கள் தமது வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் வேளையிலும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசு பெருந்தொகையான நிதியை ஒதுக்கியிருக்கிறது.
எமது கட்சி அரசாங்கத்தை அமைத்தால், இவ்வாறான வீண்விரயங்கள் உடனடியாக நிறுத்தப்படும்.
வங்குரோத்து நிலையில் உள்ள அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக கடமையாற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு நிதி ஒதுக்குவதற்கு நியாயமான காரணமொன்றை வழங்க முடியுமா? என்றார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய சகாக்கள் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர்களான சாகல ரத்நாயக்க மற்றும் அகில விராஜ் காரியவசம் ஆகியோருக்கு கணிசமான ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளமை குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.