நடிகர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
வைராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மகாதேவகி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
இந்நிலையில் தேவராட்டம் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனை அவர் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதற்கு இருதரப்பும் விளக்கமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சிமா மோகன் தமிழில் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இப்படை வெல்லும், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் மஞ்சிமா மோகனின் பிறந்த நாளையொட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படத்தை பகிர்ந்து கௌதம் கார்த்திக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் உன்னைப்போன்ற ஒரு பெண் எனது வாழ்க்கையில் இணைவதை நான் பெருமையாக கருதுகிறேன். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க எனது வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் மஞ்சிமா மோகனுடனான காதலை கௌதம் கார்த்திக் உறுதிப்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டு இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.