இலங்கையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பதற்கு உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மட்டுமே காரணம் அல்ல என முன்னாள் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“இலங்கை வரலாற்றில் மிக அதிக எரிபொருள் விலை உயர்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உயிருடன் இருந்தால், இன்று ஊடக அறிக்கை ஒன்றை விடுத்து அமைச்சர் காமினி லொக்குகே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியிருப்பார். எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ரூபா பெறுமதி வீழ்ச்சியடைந்தமையே பிரதான காரணமாகும். ஒரு வருடத்திற்கும் மேலாக அந்நியச் செலாவணியை முறையற்ற விதத்தில் நிர்வகித்ததாலும், ரூபாயின் மதிப்பு பெருமளவில் வீழ்ச்சியடைய நேரிட்டதாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. மக்கள் மீதே இந்த சுமையை திணிக்காமல், அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளைக் குறைத்து இந்தச் சுமையை அரசே ஏற்றிருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.