பஞ்சாப் மாநிலத்தில் ஒரு நகைச்சுவை நடிகர் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
5 மாநில தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பஞ்சாப் மாநிலத்தில் ‘ஆம் ஆத்மி’ கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
‘ஆம் ஆத்மி’ கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரான பகவந்த் மான் ஒரு நகைச்சுவை நடிகர் ஆவார்.
நடிகர் மட்டுமின்றி பாடகர், பேச்சாளர், சமூக ஆர்வலர் என பன்முகம் இவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் தொலைக்காட்சிகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய அவர், அதன்பின் தனது திறமையை படிப்படியாக வளர்த்துக் கொண்டு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகரானார்.
பின்னர் ‘ஆம் ஆத்மி’ தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வித்தியாசமான அரசியல் பார்வையால் ஈர்க்கப்பட்ட பகவந்த் மான், அவரது கட்சியில் இணைந்தார் .
கடந்த 2014 ஆம் ஆண்டு அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. ‘ஆம் ஆத்மி’ கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற புகழையும் அவர் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் ‘ஆம் ஆத்மி’ கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாளில் அவர் அம்மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
முதலமைச்சர் என்றால் சாமானியர் என்று தான் பொருள் என அவர் தெரிவித்துள்ளார்.