ஏப்ரல்-21 தாக்குதல் தொடர்பில் தமக்கு எதிரான வழக்கை வலுவிழக்க செய்யுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த மனு நீதிபதிகளான பிராங்க் குணவர்தன மற்றும் சமன் வீரமன் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்களால், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இருந்து இழப்பீட்டை பெற்றுத்தருமாறு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதனை வலுவிழக்கச் செய்து, குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கினை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல முடியாது என தமது சட்டத்தரணிகளால் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்ட போதிலும், அது கடந்த 7 ஆம் திகதி நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், குறித்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.