விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால், இலங்கை அரசியல்வாதிகள் தற்போது நடந்துக்கொள்வது போல் பைத்தியகாரத்தனமாக நடந்துக்கொள்ள மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் இராணுவ தளபதியுமான அவர் இதனை கூறியுள்ளார்.
நாங்கள் நாட்டுக்காக செய்த அர்ப்பணிப்புகளின் பிரதிபலன்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஒரு வேளை பிரபாகரன் இருந்திருந்தால், நாட்டின் அரசியல்வாதிகள் இப்படி மேலும் கீழும் குதித்து பைத்தியகாரத்தனமாக நடந்துக்கொள்ள மாட்டார்கள்.
நான் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவில்லை. ஜனாதிபதி பதவிக்கு 4 பேர் போட்டியிடுகின்றனர். எமது கட்சியின் தலைவர் மற்றும் மேலும் 3 பேர் போட்டியிடுகின்றனர். நாடாளுமன்றத்திற்கு முடிவுகளை காணமுடியும்.
சில அரசியல் கட்சிகளில் இருக்கும் சிலரது அரசியலை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவர்களில் சிலர் ஆதரவளித்தாலும் நான் விரும்ப மாட்டேன். அது எனது அரசியல்.
எப்படியாவது தலைகளை தேடி திருட்டு அரசியல்வாதிகளின் வாக்குகளை பெற்றுக்கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாருக்கும் வாக்களிக்காமல் இருந்து நல்லது என நான் கருதுகிறேன்.