யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வாள்வெட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐவரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (13) பொலிஸாரால் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது பொலிஸார் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதி கோரிய நிலையில் மல்லாகம் நீதவான் 24 மணி நேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
காரைநகருக்கு சென்று விட்டு வட்டுக்கோட்டை திரும்பும்போது 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்ற இளைஞர் கடத்தப்பட்டு வாள்வெட்டு மற்றும் சித்திரவதைக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் நேற்று கிளிநொச்சி பகுதியில் பதுங்கியிருந்த வேளையில் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டது.
உயிரிழந்த இளைஞனை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட கார் நேற்று இரத்த கறைகளுடன் மீட்கப்பட்டதுடன் குறித்த காரில் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் பொல்லுகள்இ இரும்பு கம்பிகள் என்பனவும் சந்தேக நபரொருவரின் காணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் மீட்கப்பட்டது.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேக நபர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.