கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்றைதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தலைமையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் அகழ்வானது இரண்டு கட்டங்களில் நடைபெற்றிருந்தது.
முதல் கட்ட அகழ்வானது 06.09.2023 அன்று ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்றதுடன், இதன்போது 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டு, அகழ்வுபணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.
அத்தோடு அகழ்வு ஆய்வு நடவடிக்கையின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனை மூலம் மனித புதை குழிக்கு மேற்கு பக்கமாக இரண்டு மீற்றர் நீளத்திற்கு உடலங்கள் காணப்படுவதாக கண்டறியப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த அகழ்வுப்பணி இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்றைய தினம் குறித்த அகழ்வு தொடர்பான வழக்கு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவிக்கையில்,
அகழ்வாய்வு நடவடிக்கையில் ஈடுபட்ட தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அகழ்வு பணியினை தொடர்ந்து நடாத்த நிதி கிடைக்கபெறவில்லை என அரசாங்க அதிபர் நீதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். திட்டமிட்டபடி நிதி கிடைக்கும் பட்சத்தில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அகழ்வு பணி ஆரம்பிக்கப்படும் என்றார்.