பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிகல, கூருகம தோட்டத்தில் ஒருவர் மதுபோதையில் தனது மாமனாரை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
51 வயதான மாரிமுத்து தர்மசீலன் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட நபரின் மூத்த மகளின் கணவரே இந்த கொலை செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது மனைவியை பிரிந்து வாழும் குறித்த நபர், தனது பிள்ளையை பார்க்க வேண்டும் எனக்கூறி நேற்று (19) கூருகம தோட்டத்திற்கு வந்த நிலையில் நண்பர்களுடன் இணைந்து மது அருந்திவிட்டு பின்னர் மாமனாருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அடுத்து இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்படவே மாமனாரை கட்டையால் தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக அங்கிருந்து ஓடியுள்ள நிலையில் இன்று (20) காலை தோட்ட பங்களா பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சடலத்தை கண்ட தோட்ட கங்காணி அது தொடர்பில் தோட்ட முகாமையாளருக்கு அறிவித்து, தோட்ட நிர்வாகத்தால் பேராதனை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த பேராதனை பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸாரும் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
கண்டி மாவட்ட பதில் நீதவானும் சம்பவ இடத்துக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டார்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான பேராதனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.