15 வயது சிறுமியை பெற்றோரின் பிடியில் இருந்து கடத்திச் சென்று அவளுடன் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வென்னப்புவ, தும்மலதெனிய பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதாக உதாசிரிகம பொலிஸார் தெரிவித்தனர்.
வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவி தனது தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாணவி தும்மலதெனிய பிரதேசத்தில் வசித்து வந்த சந்தேகத்திற்குரிய இளைஞனுடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி அதிகாலை தனது காதலனிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம், தந்தை மற்றும் சகோதரனுடன் இரகசியமாக வீட்டை விட்டு வெளியேறிய மாணவி, தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் புத்தளம் குவேனிகம பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்கு சென்றுள்ளார்.
பின்னர், பொலிஸார் நடத்திய விசாரணையில், அந்த தென்னந்தோப்பில் ஒரு மாதத்துக்கும் மேலாக இருவரும் கணவன் -மனைவியாக வசித்து வந்துள்ளமை தெரியவந்தது.
இருவர் பற்றிய தகவலை அறிந்த சிறுமியின் தந்தை, இது தொடர்பாக உதாசிரிகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி, சிறுமி மற்றும் அவரது காதலனை வரவழைத்த பொலிஸார், நேற்று (23) சந்தேக நபரான காதலனை கைது செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மாரவில அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரான காதலன் இன்று (24) மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.