லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொப்டன் சுவிண்டன் பகுதியில் தோட்ட விடுதி ஒன்றில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
46 வயதுடைய குறித்த நபர் சுவிண்டன் தோட்டத்தில் வெளிக்கள உத்தியோகத்தராக கடமையாற்றுபவர் என்பதுடன் கடமை நேர்த்தில் தான் விடுதிக்கு செல்வதாக தொழிலாளர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
இருப்பினும் மிக நீண்ட நேரமாகியும் அவர் வராததால் தொழிலாளர்கள் தோட்ட விடுதிக்கு சென்று பார்த்த போது அவர் விடுதியில் உள்ள கட்டில் ஒன்றில் இறந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் தொழிலாளர்களினால் லுணுகலை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது.
லுணுகலை பொலிஸார் சடலத்தினை வந்து பார்வையிட்டதன் பின்னர் நீதவான் பார்வையிடுவதற்காக சடலம் தற்போது குறித்த இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.
பின்னர் சட்டவைத்திய பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்