அக்கரபத்தனை டயகம பகுதியில் உள்ள தேசிய பாற் பண்ணையில் உள்ள கறவை பசுக்கள் உயர் அதிகாரி ஒருவரால், அவ்வப்போது இறைச்சிக்காக விற்பனை செய்யபட்டுள்ளதாக பண்ணையில் பணி புரியும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
2010 ஆண்டு தேசிய மிருக வளர்ப்பு அரச நிறுவனம் மூலம் நாட்டின் பால் உற்பத்தியை பெருக்கும் வகையில் அவுஸ்திரேலியாவில் இருந்து பெரும் தொகையான நிதி செலவு செய்து குறித்த பசுக்கள் பண்ணைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அவ்வாறு கொண்டுவரப்பட்ட கறவை பசுக்கள் தற்போது பண்ணையில் இல்லை என அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பண்ணையில் பணி புரியும் உயர் அதிகாரியினால் குறித்த கறவை பசுக்கள் இறைச்சிக்காக நுவரெலியா, கம்பளை, நாவலப்பிட்டி, ஹட்டன், அக்கரபத்தனை பகுதியில் உள்ள இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பசுக்கள் பண்ணையில் இருந்து பாரவூர்தி மூலம் கொண்டு செல்லப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பாற் பண்ணையில் 53 தொழிலாளர்கள் சேவையில் உள்ளனர்.
தேசிய பாற் உற்பத்தி பெறுக்கும் வகையில் தேவையான சகல வசதிகளும் கொண்ட பண்ணையாக அக்கரபத்தனை டயகம பண்ணை உள்ளது.
தொழிலாளர்கள் குற்றச்சாட்டு சம்பந்தமாக பண்ணை அதிகாரி சுஜி பெர்னாண்டோவிடம் வினவிய போது தொழிலாளர்கள் முன் வைக்கும் குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் இதற்கு தொலைபேசி மூலம் பதில் சொல்ல முடியாது என்றும், பண்ணைக்கு வந்தால் இங்கு உள்ள உயர் அதிகாரிகள் தகுந்த முறையில் விளக்கம் தருவதாகவும் கூறினார்.