யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி மாளிகையானது தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (SLIIT) சுமார் 50 வருடங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
இதன் முதலீட்டு மதிப்பு அண்ணளவாக 5000 பில்லியன் ரூபாவாகும்.
கனேடிய முதலீட்டாளருடன் இணைந்து இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இதனை தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்யவுள்ளது.
அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (16) பத்தரமுல்ல நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக, ஜனாதிபதி அலுவலகத்தின் தேசிய பாதுகாப்பு பிரதம ஆலோசகரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், ஜனாதிபதி மாளிகையை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்திற்கு (SLIIT)) குத்தகைக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.