நாட்டை சீர்குலைக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகவே கடந்த அரசாங்கத்தின் வீழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரச நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நாட்டை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சீர்குலைக்கும் சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகவே கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் வீழ்ச்சியும் ஏற்படுத்தப்பட்டது.
நாங்கள் வீழ்ச்சியடைவில்லை. எங்கள் வீழ்ச்சி வடிவமைக்கப்பட்டது.
அப்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ எடுத்த அனைத்து தீர்மானங்களையும் நான் அங்கீகரிக்கவில்லை எனினும் அவர் அர்த்தமுள்ள தீர்மானங்களை மேற்கொண்டார்.
குறிப்பாக இயற்கை உரத்தை அறிமுகப்படுத்துவதற்கான அவரது நடவடிக்கை நல்ல நோக்குடன் எடுக்கப்பட்ட முடிவாகும்.
ஒரு விவசாயியின் மகனாக அவர், தனது முடிவுகளால் விவசாயிகளை சிரமத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை என்றார்.