நாட்டை அழித்து, மக்களின் வாழ்வை சீரழித்து மக்களை அழிவின் விளிம்பிற்கு இட்டுச் சென்ற முன்னாள் அரசாங்கத்திற்கும், தற்போதைய அரசாங்கத்திற்கும் தேர்தல் என்ற வார்த்தையை கேட்டாலே அச்சம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மக்களிடம் செல்ல முடியாததாலேயே இந்தநிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே யானை, காகம், மொட்டு தரப்புகள் மூன்றும் தேர்தலை ஒத்திவைக்கும் சதியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை 22 தடவைகளுக்கும் அதிகமாக தேர்தலை சீர்குலைக்க முயற்சி செய்யப்பட்டுள்ளன. அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்பட்டதாக இந்த அரசாங்கம் தவறான வாதத்தை உருவாக்கி பிரசாரம் செய்து வருகின்றது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை சிறப்புரிமைக் குழுவுக்குக் அழைத்து, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் பக்கச்சார்பற்ற நீதித்துறைக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி செயற்படுத்தப்பட்டு வருகிறது. சிறப்புரிமைக் குழுவின் பணிகள் முடியும் வரை இந்த சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட வேண்டும்.
இந்தநிலையில், வாக்குரிமைக்காக வீதியில் இறங்கி ஜனநாயக உரிமைகளை மீறும் வகையில் செயற்படும் சர்வாதிகார அரசாங்கத்தை தோற்கடிக்க ஒன்றிணைய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.