நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கு சில அரசியல் கட்சிகளும் கிளர்ச்சியாளர்களுக்கு உதவியதாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த ஜனநாயக விரோத சக்திகள் நாடாளுமன்றத்தை கைப்பற்ற முற்பட்ட போது அக்கட்சிகளின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு அருகில் பிரசன்னமாகியிருந்ததை அனைவரும் பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார் .
கண்டியில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் தேசிய பாதுகாப்பு மற்றும் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தற்செயலாக கிளர்ச்சியாளர்கள் நுழைந்து நாடாளுமன்றத்தை தங்கள் விளையாட்டு மைதானமாக மாற்றினால், ஜனநாயகம் புதைக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வது ஜனாதிபதியின் பொறுப்பு என்றும், நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகள் போன்ற பல முக்கிய இடங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஒரு நாட்டின் அரசாங்கம் கிளர்ச்சி மூலம் அல்ல, ஜனநாயக அமைப்பின் மூலம் நியமிக்கப்பட வேண்டும் என்றும், வன்முறை மற்றும் கிளர்ச்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்தால் அது வெற்றியடையாது என்றும் அவர் மேலும் கூறினார்.