பெருந்தோட்டங்களில் நெடுங்குடியிருப்புகளில் உள்ள அனைவருக்கும் தனிவீட்டு திட்டமொன்றை அமைத்துக்கொடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன இன்று நாடாளுமன்றில் யோசனையொன்றை முன்வைத்தார்.
அரசுக்கு சொந்தமாக பெருந்தோட்டங்களில் உள்ள குடியிருப்பு தொகுதிகளில், தொழிலாளர்கள் மாத்திரமன்றி, வேறு தொழில் புரிபவர்களும் வசிக்கின்றனர்.
பெருந்தோட்டங்களில் உள்ளவர்களுக்கு மாத்திரமே தனிவீடுகள் வழங்கப்படுகின்றன. வேறு தொழில்புரிபவர்களுக்கு அவ்வாறான வீடுகள் வழங்கப்படுவதில்லை.
பெருந்தோட்டங்களில் உள்ள நெடுங்குடியிருப்புகள் பெண்களோ சிறுவர்ளோ வசிப்பதற்கு ஏற்ற சூழலை கொண்டிருப்பதில்லை.
எனவே, நெடுங்குடியிருப்புகளில் உள்ள அனைவருக்கும் பெருந்தோட்டங்களில் உள்ள கைவிடப்பட்ட காணிகளில், தனி வீடுகளை அமைக்க உரித்துகளை வழங்கி அல்லது அவர்களுக்கு சலுகை கடன் அடிப்படையிலாவது குடியிருப்புகளை அமைத்துக்கொடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன யோசனையொன்றை முன்வைத்தார்.
கடந்த அரசாங்கத்தினால், வீடமைப்பு அமைச்சின் கீழ் கண்டி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டங்களில் 15 வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அவற்றில் 600க்கும் அதிகமான வீடுகள் பகுதியளவிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவை தற்போது அழிவடையும் நிலையில் உள்ளன. இதனை முழுமைப்படுத்த உடனடி தீர்வு வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இவைபெருந்தோட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பிரச்சினை அல்ல. நாடளாவிய ரீதியிலான பிரச்சினை. இது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்றார்.
இதேவேளை, தோட்ட மக்களுக்கு 7 பேர்ச்சஸ் காணிகளை, காணி உரித்துடன் வழங்கினால் அவர்கள் குடியிருப்புகளையேனும் அமைத்துக்கொள்வர் என நாடாளுமன்ற உறுபினர் சமிந்த விஜேசிறி யோசனை முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பெருந்தோட்டங்களிலுள்ள மக்களுக்கு காணி உரித்து வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென நிதிச் சட்டமூல திருத்தத்தின்போது ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். இது தொடர்பான முன்னெடுப்புகள் குறித்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.