ரணில் விக்கிரமசிங்கவை ஏன் இவ்வளவு காலமும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் இருந்து அகற்ற முடியாதுள்ளது என்பதை இப்பொழுது இலங்கை மக்கள் உணர்ந்திருப்பார்கள் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி MP இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
இன்று (15) காலை கிண்ணியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் ரணில் விக்கிரமசிங்கவை ஏன் இவ்வளவு காலமும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் இருந்து அகற்ற முடியாதுள்ளது என்பதை இப்பொழுது இலங்கை மக்கள் உணர்ந்திருப்பார்கள்.
பதவி ஆசை கொண்ட ரணில் விக்கிரமசிங்கவால் ஐக்கிய தேசிய கட்சி அழிந்தது அது போன்ற நிலை இலங்கைக்கும் ஏற்படாமல் இருக்க நாம் இதற்கு தீர்வு காண வேண்டும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு நாடாளுமன்றத்திலேயே தீர்வு உள்ளது.கோட்டபாய ராஜபக்ஷ இராஜினாமா செய்தால் நாடாளுமன்றம் கூடி புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்து சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை நிறுவுவதன் மூலமே இந்நெருக்கடி நிலைக்கு தீர்வு காண முடியும்.
அதன்பின் மிக குறுகிய காலத்துக்குள் தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும்.ஆனால் போராட்டத்தை பயன்படுத்தி சிலர் தமது அரசியல் நோக்கங்களுக்காக திசை திருப்ப முயல்கின்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்படுத்தப்பட்ட அசாதாரண நிலைக்கு இதுவே காரணம். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துநெத்தி மற்றும் லால் காந்த போன்றவர்கள் போராட்டத்தை முன்னின்று நடாத்தியதை காணக்கிடைத்தது.
ஆகவே இதை நாம் நாட்டை மேலும் மேலும் இக்கட்டான சூழ்நிலையில் தள்ளும் மக்கள் விடுதலை முன்னணியின் நோக்கமாகவே பார்க்கிறோம். மக்கள் விடுதலை முன்னணி ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் சர்வகட்சி அரசில் பங்குகொண்டு மூன்றோ அல்லது ஆறோ மாதங்களில் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கலாம் ஆனால் ஆவேசமடைந்துள்ள மக்களை தூண்டி விட்டு ஆட்சியை பிடிக்க முயலும் முயற்சிகளை கைவிடாவிடின் நாடு பாரிய அழிவை நோக்கி செல்லும் என தெரிவித்தார்.