‘அசுரன்’ படத்தில் நடித்த மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பிரபல இயக்குநரான சணல் குமார் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
நடிகை மஞ்சு வாரியர் கந்துவட்டி கூட்டம் ஒன்றின் கட்டுப்பாட்டில் உள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து நான் சமூக வலைத்தளத்தில் நான்கு நாட்களுக்கு முன்பே பதிவிட்டேன். ஆனால் மஞ்சு வாரியர் இடமோ அவருக்கு நெருக்கமானவர்களிடமோ எந்தவிதமான பதிலும் வரவில்லை. இந்த மௌனம் எனக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மலையாளத் திரையுலகின் பாலின சமத்துவத்திற்காக பாடுபடும் அமைப்பு ஒன்றுக்கும் இது குறித்து மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்களும் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஊடகங்களும் இந்த விஷயம் குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தேசிய அளவில் புகழ்பெற்ற ஒரு நடிகையின் உயிருக்கு ஆபத்து என்ற விவகாரத்தை அனைத்து ஊடகங்களும் தீவிரமான பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியாது. குறைந்தபட்சம் அவரது உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படக்கூடாது என்று நான் பிரார்த்தனை செய்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.