முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது மனுவை, எதிர்வரும் 25ஆம் திகதி அழைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான எஸ்.துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில், இன்று குறித்த முறைப்பாடு அழைக்கப்பட்டபோது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தின்போது, பிரதிவாதியான ரஞ்சன் ராமநாயக்க, சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்த வழகிற்கு ஏதுவாய் அமைந்த கருத்து தொடர்பில், நீதிமன்றில் நிபந்தனையற்ற தமது கவலையைத் தெரிவிக்க தமது கட்சிக்காரர் எதிர்பார்ப்பதாக, ரஞ்சன் ராமநாயக்க சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தேகொட தெரிவித்துள்ளார்.
குறித்த கருத்தின் மூலம், நீதிமன்றத்தை அவமரியாதைக்கு உட்படுத்தும் எண்ணம் தமக்கு இருந்திருக்கவில்லையென தமது கட்சிக்காரர் தெரிவிப்பதாகவும், அது தொடர்பில் சமர்ப்பணம் முன்வைக்க தினம் ஒன்றை வழங்குமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி மன்றில் கோரியுள்ளார்.
இது குறித்து எதிர்வரும் 25ஆம் திகதி சமர்ப்பணம் முன்வைக்குமாறு, நீதிமன்றால் ஜனாதிபதி சட்டத்தரணிக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.