Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்விளையாட்டுநியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் தென்னாபிரிக்கா வெற்றி: தொடர் சமநிலையில் நிறைவு!

நியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் தென்னாபிரிக்கா வெற்றி: தொடர் சமநிலையில் நிறைவு!

March 2, 2022 – 6:00am

நியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 198 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி சமநிலை செய்துள்ளது.

கிறிஸ்ட்சேர்ச் மைதானத்தில் கடந்த 25ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 364 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சரேல் எர்வீ 108 ஓட்டங்களையும் டீன் எல்கர் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், நெய்ல் வாக்னர் 4 விக்கெட்டுகளையும் மெட் ஹென்ரி 3 விக்கெட்டுகளையும் கெய்ல் ஜேமீசன் 2 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, 293 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கொலின் டி கிராண்ட்ஹோம் ஆட்டமிழக்காது 120 ஓட்டங்களையும் டேரில் மிட்செல் 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கார்கிஸோ ரபாடா 5 விக்கெட்டுகளையும் மார்கோ ஜென்சன் 4 விக்கெட்டுகளையும் மஹராஜ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 71 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 354 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இதனால், நியூஸிலாந்து அணிக்கு 426 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது​.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கைல் வெர்ரேய்ன் ஆட்டமிழக்காது 136 ஓட்டங்களையும் ரபாடா 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டிம் சவுத்தீ, மெட் ஹென்ரி, கெய் ஜேமீஸன் மற்றும் நெய்ல் வாக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கொலின் டி கிராண்ட்ஹோம் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 426 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 227 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், தென்னாபிரிக்கா அணி 198 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டேவோன் கோன்வே 92 ஓட்டங்களையும் டொம் பிளெண்டல் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கார்கிஸோ ரபாடா, மார்கோ ஜென்சன், கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் லுதோ சிம்பாலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, கார்கிஸோ ரபாடாவும் தொடரின் நாயகனாக மெட் ஹென்ரியும் தெரிவுசெய்யப்பட்டனர்.

Send Push Notification: 



<!——>








Keep exploring...

Related Articles