ராஜித, பொன்சேகா, ரஞ்சனிடம் நேற்று வாக்குமூலம் பதிவு
விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பித்துள்ளன. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் இரண்டாவது மாடியில் மேற்படி அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் நேற்று முற்பகல் முதல் ஆரம்பமாகின.
நேற்றைய தினம் சாட்சியங்களை வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் நேற்றைய தினம் சாட்சியங்களை வழங்கியிருந்தனர்.
அதை வேளை தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவும் சிறைச்சாலை சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மேற்படி ஆணைக்குழுவிற்கு நேற்று அழைத்து வரப்பட்டிருந்தார்.
அதேவேளை முன்னாள் பொலிஸ் மா அதிபர்களான பூஜித்த ஜயசுந்தர, மற்றும் என்.கே. இலங்கக்கோன் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரும் நேற்றைய தினம் மேற்படி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
ஊழலுக்கு எதிரான குழு மற்றும் அதன் செயலகம் மூலம் மேற்கொள்ளப்படும் விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்து தகவல்களை பெற்றுக்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் பொருத்தமான பரிந்துரைகளை முன் வைப்பதற்காக ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளான தம்மிக்க ஜயவர்தன,ஹேமா குமுதினி விக்ரமசிங்க, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் ஆகியோர் இந்த ஆணைக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்