தமிழ் மக்களை சாகடிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னும் நீக்கப்படாமல் இருப்பது நாட்டுக்கு மிகப்பெரிய அவமானமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிடிக்குள் அகப்பட்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் கொல்லப்பட்டனர்.
எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சி ஸ்கந்தபுரம் சந்தையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது. இதில், அந்தக் கட்சியின் மாவட்ட பிரமுகர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.