Thursday, January 16, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை

எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை

March 1, 2022 – 6:00am

கொள்வனவு செய்யவுள்ள எரிபொருள் குறித்த திகதியில் நாட்டை வந்தடையும்

 

வழமையை விட அதிகளவு எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ள நிலையிலும் நாடு முழுவதும் எரிபொருளுக்கான வாகன வரிசையை காண முடிவதாக வலு சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி மாதத்தில் ஐ.ஓ.சி. நிறுவனம் இரு தடவைகள் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ள நிலையில் எரிபொருள் பாவனையாளர்கள் பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையங்களுக்கு அணி திரள்வது அதிகரித்துள்ளது.

எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் மற்றும் அதற்கான விலையதிகரிப்பு மேற்கொள்ளப்படலாம் போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் எரிபொருள் பாவனையாளர்கள் தமது வாகனங்களின் எரிபொருள் தாங்கியை நிரப்பிக் கொள்வதில் மும்முரமாக செயற்படுவதாலேயே நீண்ட வரிசையை காண முடிகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் சிலர் எரிபொருளை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர் இது அறுவடைக் காலம் என்பதால் இயந்திர உபகரணங்களுக்காக பெருமளவில் எரிபொருளை உபயோகிப்பதும் இதற்கு ஒரு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொள்வனவு செய்யப்படவுள்ள எரிபொருள் எந்தவித தாமதமும் இன்றி குறித்த திகதியில் நாட்டை வந்தடையும் என குறிப்பிட்டுள்ள அவர். அதற்காக செலுத்தவேண்டிய டொலர்களை விடுவித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க பொது போக்குவரத்து களுக்காக எரிபொருளை வழங்குவதில் எந்த சிக்கல்களும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அரசாங்கத்திடம் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். நேற்றும் பல இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வாகனங்கள் வரிசையில் நின்றதாக அறிய வருகிறது. இதனால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்ப நிலை ஏற்பட்டது. மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலே எரிபொருள் விநியோகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Send Push Notification: 



<!——>








Keep exploring...

Related Articles