வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா என்பதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
பதுளையில் நேற்று (16) பிற்பகல் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், நாட்டை இருளில் மூழ்கடிக்கும் வரிசை யுகத்திற்கு இடமளிக்க வேண்டாம் என அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக கடந்த இரண்டு வருடங்களில் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டத்தை வலுவாக நடைமுறைப்படுத்த மக்களிடம் ஆணை கேட்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.